யுனிவர்சல் பாஸ் கிரிஸ் கெய்லிடம் நடத்தப்பட்ட ஒரு கலகல பேட்டி!!
கடந்துபோன ஐ.பி.எல். சீசன் பற்றி உங்கள் கருத்து?
மீண்டும் ஒருமுறை நான் ஐ.பி.எல்.லின் அங்கமாக இருந்தது அற்புதம். உலகிலேயே சிறந்த கிரிக்கெட் தொடர் இது. இந்த சீசனில் நான் புது அணியில் ஆடினேன், அங்கு எனக்குக் கிடைத்த வரவேற்பு அருமை. எங்களின் தொடக்கம் சிறப்பாக இருந்தது, ஆனால் பிற்பாடு வேகத்தை இழந்து விட்டோம். அடுத்த ஆண்டு சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
என்னைத் தேர்வு செய்ததன் மூலம் சேவாக் ஐ.பி.எல்.லை காப்பாற்றிவிட்டார் என்று சொன்னீர்களே? நகைச்சுவைக்காக அப்படிச் சொன்னீர்களா?
அது ‘ஜோக்’ இல்லை. நான் சீரியசாகத்தான் சொன்னேன். ஐ.பி.எல்.லுக்கு நட்சத்திரங்கள் தேவை. அதற்கு எனது தேர்வு உதவியது. நான் ஐ.பி.எல்.லுக்கு நிறைய செய்திருக்கிறேன். நீங்கள் பழைய புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். சர்வதேச டி-20 யிலும் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறேன், ஒரு கோப்பையை வென்று கொடுத்திருக்கிறேன். இன்றும் சுறுசுறுப்பாக இருக்கிறேன், நன்றாக ஆடுகிறேன். இப்போதும் கிரிக்கெட்டுக்கு என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதை நீங்கள் பார்க்கலாம். நான் இந்தியாவில் கிரிக்கெட் ஆட விரும்புகிறேன். இங்கே இந்த விளையாட்டு தீவிரமாய் ரசிக்கப்படுகிறது. என்னிடமும் இன்னும் எரிபொருள் தீர்ந்துவிடவில்லை.
ஆரம்பத்தில் உங்களை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வராதபோது நீங்கள் கவலைப்பட்டீர்களா?
இல்லை… இல்லை… இல்லை. நான் அதுகுறித்து ஆச்சரியப்படவில்லை. நான் ஆரம்பத்திலேயே ஏலத்தில் எடுக்கப்பட்டேனா, கடைசி நேரத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்டேனா என்பது விஷயமே இல்லை. எனக்கு வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்புகள் இல்லை. நாம் நம்மை ஏமாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் ஐ.பி.எல்.லில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். உண்மையில், ஏலத்தில் என்ன நடக்கிறது என்று நான் கவனிக்கவே இல்லை. அந்த நேரம், எங்கள் கரீபியனில் அதிகாலை நேரம் என்பதால் நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.
ஐ.பி.எல். ஏலத்துக்கு முன்னால் நீங்கள் வங்காளதேசத்தில் 18 சிக்சர்களுடன் அதிரடியாக 146 ரன்கள் குவித்திருந்தீர்கள். அப்படியிருந்தும் உங்களை ஏலத்தில் எடுக்க ஏன் யோசித்தார்கள்?
எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் எனது வயது குறித்து யோசித்திருக்கலாம். வாட்சனுக்கு என்ன வயது? அவர் இரண்டு செஞ்சுரிகள் அடித்திருக்கிறாரே? எனக்கு வயது 39. ஆனால் நான் இப்போதும் சதங்கள் அடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் உங்களை ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்கிறீர்கள். அதற்கு அர்த்தமென்ன?
என்னை பொதுவாக ‘வேல்டு பாஸ்’ என்பார்கள். அது மாதிரிதான்.