ஐபிஎல் 2020-ம் ஆண்டுக்கான ஏலம் எப்போது நடக்கும், எத்தனை மணிக்கு நடக்கும், எத்தனை வீரர்கள் பங்கேற்பார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முந்தைய ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் அனைத்தும் பெங்களூருவில்தான் நடந்தது. ஆனால், பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவர் கங்குலி பதவி ஏற்றுள்ளதையடுத்து இந்த முறை ஏலம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19-ம் தேதி ஐபிஎல் ஏலம் நடை பெற உள்ளது
முதலில் திட்டமிட்டபடி ஏலம் 19-ம் தேதி காலையில் நடப்பதாக இருந்தது. ஆனால், ரசிகர்கள் அதிகமானோர் ஏலத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் ஏலத்தின் நேரம் காலை 10 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.
வழக்கமாக வீரர்கள் ஏலம் குறித்த அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வர்ணனை செய்யப்படும். ஆனால், முதல் முறையாகப் பிராந்திய மொழிகளாகத் தமிழ், தெலுங்கு, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நேரலை வர்ணனை செய்யப்பட உள்ளது.
இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் ஏலத்துக்காக வெளிநாடு, உள்நாடு என மொத்தம் 971 வீரர்கள் தங்களைப் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், இதில் 332 பேர் மட்டுமே ஏலத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஐபிஎல் போட்டியில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் உடைய 19 இந்திய வீரர்கள், 24 புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மே.இ.தீவுகள் கேஸ்ரிக் வில்லியம்ஸ், வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ஆஸி, சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா ஆகியோர் முதல் முறையாக இடம் பெறுகிறார்கள். 8 அணிகளிலும் தற்போது 73 வீரர்களுக்கான காலியிடங்கள் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவார்கள்.
இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராபின் உத்தப்பாவுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல ஐபிஎல் போட்டிகளாகக் கோடிக்கணக்கான விலைக்கு ஏலம் போன ராஜஸ்தான் வீரர் உனத்கத்தின் அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெலுக்கு அடிப்படை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஓய்வில் இருப்பதால் வருவாரா எனத் தெரியவில்லை. இது தவிர பாட் கம்மின்ஸ், ஹேசல்வுட், மிட்ஷெல் மார்ஷ், டேல் ஸ்டெயின், மாத்யூஸ் ஆகியோரின் விலையும் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஆரோன் பிஞ்ச், கிறிஸ் லின், ஜேஸன் ராய், மோர்கன், ராபின் உத்தப்பா ஆகியோர் முதல் கட்டமாக ஏலத்தில் அனுப்பப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மோர்கன், ஜேஸன் ராய்க்கு அதிகமான கிராக்கி இருக்கும்.
அதன்பின் 2-வது கட்டத்தில் மேக்ஸ்வெல், மோரிஸ், கம்மின்ஸ் அதைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக கொல்கத்தா அணி 11 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது. அந்த அணியின் கைவசம் ரூ.35.65 கோடி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.29 கோடி கைவசம் உள்ளது. அந்த அணி 11 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் வசம் ரூ.28 கோடி உள்ளது. அந்த அணி 12 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது.