இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ‘பேபி பவுலர்’ என்று பாகிஸ்தானின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் கூறியதை புறம் தள்ளுங்கள் என்று இர்பான் பதான் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது கிரிக்கெட் பயணத்தை பகிர்ந்திருந்தார்.
அதில், “நான் எனது கிரிக்கெட் அனுபவத்தில் மெக்ராத், வசிம் அக்ரம் உள்ளிட்ட உலகின் சிறப்பான பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டுள்ளேன். அவ்வாறு இருக்கையில் பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களை எதிர் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. பும்ரா என் முன்னால் ’பேபி பவுலர்’ . அவரை நான் சிறப்பாக எதிர் கொள்வேன்”என்றார்.
இதனைத் தொடர்ம்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அப்துல் ரசாக்கை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் பும்ராவுக்கு ஆதரவாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்துல் ரசாக்கின் பெயரை குறிப்பிடாமல், “ இந்திய ரசிகர்களே இம்மாதிரியான கருத்துகளை புறம் தள்ளுங்கள். இவற்றை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,
விராட் கோலி மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் சீரான முறையில் ரன்களை குவிப்பவராக இருக்கலாம் ஆனால் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கரின் ‘கிளாஸ்’ வகையில் கோலியை சேர்க்க முடியாது என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு அவர் அளித்த நேர்காணலில், “1992 முதல் 2007 வரை நாங்கள் எதிர்த்து விளையாடிய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இப்போது இல்லை. டி20 கிரிக்கெட் அனைத்தையும் மாற்றி விட்டது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்திலும் ஆழம் எதுவும் இல்லை. இவை கிரிக்கெட்டின் அடிப்படைகள்.
விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள் ஸ்கோர் செய்யத் தொடங்கினால் ஸ்கோர் செய்து கொண்டேயிருக்கிறார், ஆம் அவர்களுக்கு அவர் நல்ல பிளேயர்தான். சீரான முறையில் ஆடுகிறார். ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் சரிநிகராக ஒப்பிட மாட்டேன், சச்சின் டெண்டுல்கர் வேறு ஒரு தரநிலையில் இருக்கிறார்” என்றார் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர்.