ஒரு ஆல் ரவுண்டர் இடத்திற்கு அதிக வீரர்கள் போட்டியிடுவது ஆரோக்யமானது: கேதர் ஜாதவ்!
தோனி என்னை அழைத்தால் நான் கண்ணை மூடிக்கொண்டு நான் பந்துவீசுவேன், என் கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டமைத்தவர் தோனி என்று கேதார் ஜாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மவுண்ட் மவுங்கினி நகரில் இன்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் களமிறங்கிய கேதார் ஜாதவ், தோனியுடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்து 22 ரன்கள் சேர்த்தார். இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் காட்டடி அடித்ததால்தான் ஸ்கோர் 324 ரன்களைத் தொட்டது.
அதுமட்டுமல்லாமல் விக்கெட் நிலைத்து நிற்கும் நேரத்தில் பகுதிநேரப் பந்துவீச்சாளராக கேதார் ஜாதவைப் பயன்படுத்தும் சில நேரங்களில் விக்கெட்டும் வீழ்த்தும் திறமை உடையவர். நேப்பியரில் நடந்த போட்டியில் ஹென்ரி நிகோலஸையும், இன்றைய போட்டியில் ஆபத்தான பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் விக்கெட்டையும் ஜாதவ் வீழ்த்தினார். இதுவரை 51 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாதவ் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், கேதார் ஜாதவ் ஆகியோர் பந்துவீசும் போது விக்கெட் கீப்பிங் செய்யும் தோனி அவ்வப்போது ஆலோசனை கொடுத்து விக்கெட் வீழ்த்தும் சூட்சமசங்களை கற்றுத் தருகிறார்.
இன்றைய போட்டியில் தனது ஆட்டம் குறித்து கேதார் ஜாதவ் கூறியதாவது:
“இன்றைய ஆட்டத்தில் தோனியுடன் இணைன்து விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு தோனியே காரணம். தோனியுடன் நான் இணைந்து விளையாடும்போது எப்போதும் என்னை அவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். ஜிம்பாப்வே தொடரில் என்னை முதலில் சந்தித்தார். அதன்பின் இந்தியாவில் நியூசிலாந்து தொடரில் என்னை அணியில் சந்தித்து 2 ஓவர்கள் பந்துவீசக் கூறினார்.

ஆனால், என் அதிர்ஷ்டம் 2-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டேன். உடனே மூத்த வீரர்கள் கோலி, ரோஹித், அனைவரும் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்கள். எனக்கு நம்பிக்கையளிக்கு என்னை அணியில் பகுதிநேரப் பந்துவீச்சாளராக மாற்றியவர் தோனிதான். நான் தோனியும், கோலிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
சிக்கலான தருணங்களில் என்னால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை வைத்து பந்துவீச அழைக்கிறார்கள். அதுபோலவே விக்கெட்டும் வீழ்ந்துவிடுகிறது. கடந்த காலங்களிலும் நான் தோனியிடம் தெரிவித்தது என்னவென்றால், மகிபாய்(தோனி அண்ணா) நீங்கள் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு பந்து வீசுவேன். விக்கெட்டையும் கொண்டுவருவேன் என்று தெரிவித்துள்ளேன்.

நான் பிரதான சுழற்பந்துவீச்சாளராக வரும் எண்ணம் இல்லை. ரன்களை அதிகம் கொடுக்காத பகுதிநேரப் பந்துவீச்சாளராகவே வரவே எனக்கு விருப்பம். குறிப்பாக என்னுடைய கேப்டன் என்னிடம் பந்தைத் தரும்போது, அதிகம் பவுண்டரி அடிக்கவிடாமல் பந்துவீசு, விக்கெட் வீழ்த்தினால் அதுஉனக்கு போனஸ் என்பார். சிலநேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைக் குறைத்து எடைபோட்டு பந்தைச் சந்திப்பார்கள். அப்போது அவர்களின் பலவீனம் அறிந்து பந்துவீசும் போது விக்கெட் விழ்ந்துவிடும். அவர்களின் தவறுதான் என்னுடைய அதிர்ஷ்டம்”.
இவ்வாறு கேதார் ஜாதவ் தெரிவித்தார்.