நியூஸிலாந்திற்கு எதிரான போட்டி மழையால் நின்றிருந்தாலும், காயம்படாமல் இருப்பதில் மகிழ்ச்சி என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் 18வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறயிருந்தது. இங்கிலாந்தின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறயிருந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் வென்றும், இன்றைய போட்டியில் ஒரு புள்ளி பெற்றும் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி, இன்று ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளுடன் 3 இடத்தில் இருக்கிறது.

போட்டி கைவிடப்பட்டதால் மைதானத்தில் மட்டுமின்றி, டிவியின் முன் காத்திருந்த ரசிகர்களும் கடுப்பாகினர். இந்த உலகக் கோப்பையில் மழையால் ரத்து செய்யப்படும் 3வது போட்டி இதுவாகும்.
பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘அவுட் பீல்டு விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாத நிலையில் போட்டியை கைவிட்டிருப்பது சாதுர்யமான முடிவு. எப்போதும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இல்லாவிட்டால் வீரர்களுக்கு காயம் தான் ஏற்படும். இரு அணிகளும் இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், புள்ளியை பகிர்ந்து கொள்வது மோசமானது அல்ல.
அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளோம். அப்போது எத்தகைய மனநிலையுடன் இருப்போம் என்பதை அறிவோம். இந்த ஆட்டத்தை மையமாக வைத்து உணர்வுபூர்வமான ஒரு சூழல் நிலவுவதால், முதல்முறையாக உலக கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு நெருக்கடி உருவாகலாம். ஆனால் களத்திற்கு வந்து விட்டால் எல்லாமே அமைதியாகி விடும். களம் இறங்கி வியூகங்களை கச்சிதமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். இது போன்ற மிகப்பெரிய ஆட்டத்தில் விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். இத்தகைய ஆட்டங்கள் எங்களது முழு திறமையை வெளிக்கொண்டு வரும்.
கைவிரலில் காயமடைந்துள்ள ஷிகர் தவான் ஓரிரு வாரங்கள் விரலில் கட்டுடன் இருப்பார். விரைவில் அவர் குணமடைந்து, லீக் சுற்றின் கடைசி கட்டத்திலும், அரைஇறுதியிலும் ஆடுவார் என்று நம்புகிறேன்’ என்றார்.