இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் கூறினார்.
அந்த டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களில் தலா ஒரு விக்கெட் எடுத்த உனத்கட், கடைசி ஆட்டத்தில் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில், இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான நம்பிக்கையை, இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடர் எனக்கு அளித்துள்ளது. இதற்கு முன்பு உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டபோதும், சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு முன்பு இந்திய அணிக்காக விளையாடியபோது கிடைக்காத நம்பிக்கை, இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் விளையாடியபோது கிடைத்துள்ளது. இந்தத் தொடர் எனது வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறேன்.
அணியின் பந்துவீச்சில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இருப்பது, எதிரணி மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்த உதவும் என்று நம்புகிறேன். எனவே, நான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். அதுபோன்ற தருணங்களுக்காக இப்போதிருந்தே தயாராகிறேன்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சமதள ஆடுகளத்தில் பந்துவீசுவது, எனது உடற்தகுதியை மேம்படுத்தவும், எனது பந்துவீச்சில் முதிர்ச்சியை கொண்டுவரவும் உதவுகிறது என்று உனத்கட் கூறினார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரின் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களம் கண்ட உனத்கட், 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 2016-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் மூலம் அறிமுகமான உனத்கட், ஓராண்டுக்குப் பிறகு தற்போது இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளார்.