தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளார்.
நியூலேட்ண்ட்சில் நடைபெற்ற மொமெண்டம் ஒன் டே கப் போட்டியில் டுமினி லெக் ஸ்பின்னர் எடி லீயி என்பவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார்.
நைட்ஸ் அணியின் 240 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடிய கேப் கோப்ராஸ் அணி 36வது ஓவரில் 208/2 என்று சவுகரியமாக இருந்தது. டுமினி களத்தில் இருந்தார். போனஸ் புள்ளி பெற வாய்ப்பிருக்கிறது என்பதால் டுமினி, எடி லீயி என்ற லெக்ஸ்பின்னரை அடித்து நொறுக்குவது என்று திட்டமிட்டார்.

முதலில் ஒரு ஸ்லாக் ஸ்வீப், நேராக ஒரு சிக்ஸ், பிறகு லெக் திசையில் இரண்டு பெரிய சுற்று சுற்றினார் 4 பந்துகளில் 4 சிக்சர்கள். 2 சிக்சர்கள் அடித்தால் 2007 உலகக்கோப்பையில் ஹெர்ஷல் கிப்ஸின் 6 சிக்சர்கள் சாதனை சமன் என்ற நிலை.
ஆனால் லீயி 2 ரன்களைத்தான் அடுத்த பந்தில் விட்டுக் கொடுத்தார், மொத்தம் 26 ரன்களே டுமினி எடுத்தார், இன்னும் ஒரு பந்து மீதமுள்ளது, ஆனால் கடைசி பந்தை லீயி நோபாலாக வீச டுமினி இதனை நான்கு ரன்களுக்கு விரட்டினார். மொத்தம் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த பந்து சிக்சருக்குப் பறக்க 37 ரன்கள் ஒரே ஓவரில் அடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தினார் டுமினி.

ஆனால் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ரன்கள் ஆகும், முன்னதாக அக்டோபர் 2013-ல் ஜிம்பாப்வேயின் எல்டன் சிகும்பரா டாக்கா பிரிமியர் லீகில் வங்கதேசத்தின் அலாவுதீன் பாபு வீசிய ஒரு ஓவரில் 39 ரன்களை விளாசியதே சாதனையாக உள்ளது. டுமினி 37 பந்துகளில் 70 நாட் அவுட்.