2017-ல் முதல்முதலாக டெஸ்ட் ஆட்டத்தை நடத்திய ராஞ்சி, அடுத்த இரண்டரை வருடங்களில் இன்னொரு டெஸ்ட் ஆட்டத்தை நடத்துகிறது. அதிகக் கூட்டம் வருகிற, கிரிக்கெட் ஞானம் கொண்ட ரசிகர்களை உடைய சென்னைக்குக் கூட இந்தக் கொடுப்பினை இல்லை. கடைசியாக 2016 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. அடுத்த வாய்ப்பு 2021-ல் கிடைத்தால் தான் உண்டு. அதற்கும் பிசிசிஐ மனது வைக்கவேண்டும்.
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் ஆட்டங்களைப் பெற்றாலும் ராஞ்சிக்கு ஒரே தலைவலியாக உள்ளது. காரணம், டிக்கெட்டுகளை வாங்க ஆளே இல்லையாம்.
ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் நஃபிஸ் கான் ஒரு பேட்டியில் கூறியதாவது: அடுத்தத் தடவை டெஸ்ட் ஆட்டத்தை ராஞ்சியில் நடத்த ஒன்றுக்கு இருமுறை நிச்சயம் யோசிப்போம். அதேசமயம், வேண்டாம் என்றும் கூறமுடியாது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் டெஸ்ட் ஆட்டத்தை நிராகரித்தால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து போய்விடும். காலியான மைதானங்களைப் பார்க்க வருத்தமாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு ஏற்றாற்போல குறைந்த விலையில் தான் டிக்கெட்டுகள் உள்ளன. குறைந்தபட்ச கட்டணம் ரூ. 250. இத்தனைக்கும் 5000 டிக்கெட்டுகளை இலவசமாக ராணுவ வீரர்களுக்கும் 10,000 டிக்கெட்டுகளை பள்ளிகள், கிளப்புகள், அகாடமிகளுக்கு வழங்கியுள்ளது ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம்.
இந்நிலையில் இந்தப் போட்டியை நேரில் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டியை தோனி தனது சிறு வயது நண்பரும் ஜார்கண்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான மிஹிர் திவாகருடன் இணைந்து பார்க்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதற்காக இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து நாளை அதிகாலை ராஞ்சி வர உள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அத்துடன் அவர் நிகழ்ச்சிகளிலும் பெரிதாக பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில் தோனி நாளை போட்டியை காண வர உள்ளது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.