ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரை சேர்ப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்னாஃப்ரிக்க டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சியில் தெரிந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. மற்றொரு வீரர் பான்கிராஃப்ட்-க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில், நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால், தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது. இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் 1-1 என டிராவில் முடிந்தது.
இரு அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். “உடனே அவர்களை அணியில் சேர்க்க முடியாது. அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். 3 பேரிடமும் தனித்தனியாக சந்தித்து பேசினேன். சரியான நேரத்தில் அவர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள்.” என்று அவர் கூறினார்.
ஒருசில நாட்களுக்கு முன், வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியது. வேகப்பந்துவீச்சாளரின் பயிற்சிக்காக அவர் வலைப்பயிற்சிக்கு வந்ததாக கூறப்பட்டது. அதேபோல், பான்கிராஃப்ட்டின் தடைக்காலம் டிசம்பர் 29-ம் தேதியுடன் முடிவதால், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.