கபடி விளையாட்டு எங்கும் பரவிட வேண்டும் என்பதற்காகவே விளம்பர தூதராக இருக்க ஒத்துக்கொண்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளன.
இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் பங்கேற்கின்றன.
தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது. நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராம் சரண் தேஜா உள்ளிட்டோர் இணை உரிமையாளர்களாக உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ளார்.
இந்த அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், கேப்டனாக அஜய் தாகூரும் உள்ளனர். தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
புகழை சூடுங்கள்
தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடுங்கள் என்று கூறினார்.
கமல் பேச்சு
இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா இன்று பிற்பகலில் சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர், எதோ ஒரு ஐரோப்பிய தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டான கிரிக்கெட் உலக புகழ் அடைய முடியுமென்றால் , பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வரும் எங்கள் விளையாட்டும் ஒரு நாள் உலக புகழ் அடையும் என்பது எனக்கு முன்பே தெரியும்.
விளம்பர தூதரானது ஏன்?
கபடி விளையாட்டு எங்கும் பரவிட வேண்டும் என்பதற்காகவே விளம்பர தூதராக இருக்க ஒத்துக்கொண்டேன் . தமிழ் நாட்டில் பிறந்த விளையாட்டு கபடி என்றும் பலர் கூறுவர். இதனால் இறுதி சுற்றில் தமிழ் தலைவாசல் அணி வெற்றி பெற வேண்டும். இதற்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என்று கூறினார்.