உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி, விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி 22ஆம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. 24 ஆம் தேதி அங்கு பயிற்சிப் போட்டிகள் தொடங்குகின்றன.உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். அதனால், அந்த தொடரின் கடைசி சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அவருக்கு காயம் எப்படி குணமாகிறது என்பதைப் பொறுத்து, உலகக் கோப்பை அணியில் அவருக்குப் பதில் யாரை தேர்வு செய்வது என்பது முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கேதர் ஜாதவுக்குப் பதிலாக ராயுடு, ரிஷாப் பண்ட் உள்ளிட்ட வீரர்களை பரிசீலிக்கலாம் என முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் உடல் நிலையை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், அவருக்கு தொடர்ந் து பயிற்சிகள் அளித்து வந்தார். இதையடுத்து வியாழக்கிழமை அவருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் காயம் குணமாகி விட்டது தெரிந்தது. இதையடுத்து 22- ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் அவரும் செல்கிறார். என்றாலும் இதுபற்றி அதிகாரப் பூர்வ தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கும் என்று தெரிகிறது.
உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள ஆல் ரவுண்டர்களில் கேதர் ஜாதவும் ஒருவரும். மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடக்கூடிய ஜாதவ், 59 போட்டிகளில் 1174 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் ஐந்து அரை சதங்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 102.50. அவர் 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
காயத்துடன் போராடும் வீரர்களில் ஒருவர் அவர். கடந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் குணமடைந்து ஆசிய கோப்பைப் போட்டியில் பங்கேற்றார். அடுத்தும் காயமடைந்தார். பின்னர் மீண்டும் வந்து இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். அதிலும் காயம் அடைந்தார்.