ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பகுதிக்கு முதுகெலும்பாக இருந்தார் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. ஆனால், தற்போது இந்திய அணி தேர்வாளர்கள் அவரை கண்டுகொள்வதே இல்லை.
இந்திய அணியின் இடது கை நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கடைசியாக அக்டோபர் 2015இல் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு 2016-ஆம் ஆண்டு நியூஸிலாந்து தொடருக்கு அவரை அழைத்தார்கள், ஆனால் அவர் காய்ச்சலால் அவதி பட்டதால், அவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. அதன் பிறகு, அவரை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்தார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சுரேஷ் ரெய்னா, மூன்று போட்டிகளில் 104 ரன் அடித்தார். அதன் பிறகு ஐபில் தொடரிலும் சிறப்பாக விளையாடினார், 14 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னா 442 ரன் அடித்தார். ஆனால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அதன் பிறகு இந்திய அணியில் தேர்வாக ‘யோ-யோ’ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்கள். அந்த டெஸ்டில் இரண்டு முறை சுரேஷ் ரெய்னா பெய்ல் ஆனதால், அவருக்கு இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த பிரச்சனைகள் இல்லாமல், தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபி போட்டிகளிலும் அவர் சொதப்பி வருகிறார். ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 99 ரன் மட்டுமே அடித்து இருக்கிறார்.
தற்போதைக்கு அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாது, இதனால் இப்போது இல்லை என்றால், ஒருநாள் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என சுரேஷ் ரெய்னா நம்பிக்கையாக இருக்கிறார். கவுரவ் கபூருடன் உரையாடி கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ராவை போல் அவரும் கூடிய விரைவில் கம்பேக் கொடுப்பதாக கூறினார்.
“நான் திரும்பி வர ஒரு உணர்வு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் கம்பேக் கொடுக்கிறார்கள். யுவராஜ் சிங் திரும்ப வருகிறார், 38 வயதில் ஆஷிஷ் நெஹ்ரா விளையாடுகிறார், இது தான் என்னை தூண்டியது. இன்று இல்லை என்றால் நாளை, நாளை இல்லை என்றால் நாளை மறுநாள், இல்லை என்றால் 10 நாட்கள் கழித்து, இல்லை என்றால் 10 மாதங்கள் கழித்து, ஆனால் கண்டிப்பாக அவர்கள் என்னை விளையாட வைக்க வேண்டும்,” என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.