‘‘லோகேஷ் ராகுலை மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே களமிறக்க வேண்டும்,’’ என, முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தோனிக்கு பின், விக்கெட் கீப்பருக்கான இடம் காலியாக உள்ளது. விக்கெட் கீப்பராக செயல்பட லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதுகுறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைப் கூறியது:
லோகேஷ் ராகுல் ‘மெயின்’ விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இது, இவருக்கு கூடுதல் சுமையாகிவிடும். இவரை மாற்று விக்கெட் கீப்பராக மட்டும் களமிறக்கினால் நல்லது. இதனால் இவரது பேட்டிங் பாதிக்கப்படாது.

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு தோனி கட்டாயம் தேர்வு செய்யப்பட வேண்டும். சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இக்கட்டான நேரத்தில் அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். திறமையான வீரரான இவர் தேர்வு செய்யப்படாவிட்டால், தவறான முடிவாகிவிடும். ஒவ்வொரு வீரரும், நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். தற்போது இது, தோனிக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசிமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடிய நோயான கொரோனா வைரசின் தீவிர தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசத்தின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் முக்கியம். எங்களது விளையாட்டில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு தான் எங்களது பிரதான முன்னுரிமையாக இருக்கும். பாதுகாப்பும், உகந்த சூழலும் உருவாகும் போது மட்டுமே 2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடங்கப்படும்.
இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு, ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்புதாரர்கள், விளம்பரதாரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நிலைமையை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து, போட்டியை தொடங்குவதற்குரிய சாத்தியக்கூறு குறித்து ஆராயும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்’ என்று அதில் கூறியுள்ளார்.