உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ராணுவ முத்திரை பதித்த கையுறையை (குளோவ்ஸ்) உபயோகப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இத்தகைய கையுறையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் தனிப்பட்ட லோகோவை பயன்படுத்த அனுமதி கிடையாது, இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெளிவுப்படுத்தியது.
இந்த நிலையில் ஐசிசி-யின் விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘‘ஐசிசி-யின் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவது என்பதுதான் எங்களது நிலைப்பாடு. விதிமுறைகளை நாங்கள் மீறமாட்டோம். நாங்கள் விளையாட்டை நேசிக்கும் ஒரு தேசம்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் 14வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. லண்டன் கென்னிங்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஸ்டார்க் வீசிய 2வது ஓவரின் மூன்றாவது பந்தை ரோகித் அடித்தார். அது ஆஸ்திரேலிய பவுலர் கோல்டர் நைல் அருகே செல்ல, அவர் அதை பாய்ந்து பிடிக்க பார்த்தார். ஆனால் கேட்ச் மிஸ் ஆனது. இதனால் ரோகித் மறு வாய்ப்பு பெற்றார். இதையடுத்து அடிக்கத் தொடங்கிய தவான் ரன்களை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் இருவரும் அரை சதத்தை கடக்க, ஆஸ்திரேலியா விக்கெட்டை எடுக்கமுடியாமல் திணறியது. இந்திய அணியின் ஸ்கோர் 127 ரன்களில் இருக்கும் போது, ரோகித் ஷர்மா 57 (70) ரன்களில் கோல்டர் நைல் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கோலியுடன் சேர்ந்து விளையாடிய தவான் அதிரடியை தொடர்ந்தார். மேலும், 95 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.