இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 5 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இதற்கான அணியை தேர்வு செய்ய தலைமை தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான குழு இன்று கூடியது. மேலும், காலை 11 மணியளவில் தேர்வுக் குழுவிற்கும் விராட் கோலிக்கும் இடையில் மீட்டிங் நடந்தது.
மும்பையில் நடந்த இந்த மீட்டிங்கிற்கு பிறகு தேர்வு குழு தலைவர் இந்திய அணியை அறிவித்தார். மூன்று வகையான போட்டிகளுக்கும் தனித்தனியே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட அணி, 3 ஒருநாள் போட்டிகளில் 15 பேர் கொண்ட அணியில் 3 டி20 போட்டிகளுக்கு 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த அணிகள் அனைத்திற்கும் விராட் கோலி கேப்டனாக தலைமை தாங்குகிறார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி20 மட்டும் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் ஆடுவார்.
இதற்கு முன்னதாக தோனி ஓய்வினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதகாலம் விருப்ப ஓய்வு வேண்டும் என கேட்டு ராணுவத்திற்கு சென்று பணிபுரிய உள்ளார்.
இந்நிலையில் இந்த அணியை அறிவித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத் தோனி பற்றியும் பேசினார்.
”தோனி எங்களிடம் இந்த தொடருக்கு முன்னதாக பேசினார். இந்த தொடரில் ஆட மாட்டேன் என்றும் கூறினார். அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கிறோம். இதனால் அவரை விட்டுவிட்டு மற்ற வீரர்களை வைத்து அணியை தேர்வு செய்தோம். அடுத்த உலகக் கோப்பைக்கு நாங்கள் தற்போது தயாராக வேண்டியுள்ளது .அதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறோம். தோனி இல்லாத நேரத்தில் ரிஷப் பண்ட் அனைத்து விதமான போட்டிகளிலும் கீப்பிங் செய்வார். அதுவே தற்போதைய திட்டம்.

தோனி போன்ற ஒரு ஜாம்பவானுக்கு, எப்போது ஓய்வு பெறவேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நாம் அவரிடம் பேசக்கூடாது. ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்று தோனியின் ஓய்வு குறித்தும் பேசினார் எம்எஸ்கே பிரசாத்.