இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து புறப்பட்டு செல்வதற்கு முன்னர், விமான நிலையத்தில் ராதா என்ற சிறுமியுடன் விராட் கோலி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துடன் 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது. டெல்லி விமான நிலையத்தில் இந்திய வீரர்கள் இருந்தபோது, ராதா என்று சிறுமி விராட் கோலியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார். அப்போது அந்தச் சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, விராட் கோலி புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுக்கும் போது மகிழ்ச்சியுடன் சிறுமி சிரித்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
Little Radha wanted a picture with #TeamIndia captain @imVkohli and the smile on her face tells the story. pic.twitter.com/FTOPrNFu27
— BCCI (@BCCI) June 23, 2018
அயர்லாந்து அணியுடம் வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 டி20 போட்டிகள் விளையாடும் இந்திய அணி, அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் உடனான தொடரில் 3 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா விளையாடுகிறது. ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, “தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாடிய போது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தோம். அப்போது நாங்கள் விளையாட்டில் மங்கிவிட்டதாக, ரசிகர்கள் நினைத்தனர். பின்னர் 3வது டெஸ்டில் வெற்றி பெற்றோம். அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் வென்றோம். அப்போது ரசிகர்கள் எங்கள் ஆட்டத்தின் திறமையை புரிந்துகொண்டனர். இங்கிலாந்து தொடரில் விளையாட 100% தயாராக உள்ளோம். நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறோம். கடினமான கிரிக்கெட்டை எதிர்கொள்ள நினைக்கின்றோம்” என்று தெரிவித்தார்.
இந்திய அணி: விராத் கோஹ்லி (இ) , ஷிகார் தவான் , ரோகித் சர்மா , லோகேஷ் ராகுல் , சுரேஷ் ரெய்னா , மனிஷ் பாண்டே , டோனி , ஹர்திக் பாண்டியா , தினேஷ் கார்த்திக் , யுஜவேந்திர சாஹல் , குல்தீப் யாதவ் , வாஷிங்டன் சுந்தர் , புவனேஸ்வர் குமார் , ஜஸ்ப்ரிட் பும்ரா, சித்தார்த் கவுல் , உமேஷ் யாதவ்
அயர்லாந்து அணி : கேரி வில்சன் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிரினி, பீட்டர் சேஸ்ஸ், ஜோர்ஜ் டாக்ரெல், ஜோஷ் லிட்டில், ஆண்டி மெக்ரரைன், கெவின் ஓ ‘பிரையன், வில்லியம் போர்டர்ஃபீல்ட், ஸ்டூவர்ட் போயன்டர், பாய்ட் ரான்கின், ஜேம்ஸ் ஷானோன், சிமி சிங், பால் ஸ்டிரிங், ஸ்டூவர்ட் தாம்சன்