வங்காள தேசம் டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா செல்கிறது. முதல் போட்டி வருகிற 28-ந்தேதியும், 2-வது போட்டி அக்டோபர் 6-ந்தேதியும் தொடங்குகிறது.
இதற்கான வங்காள தேசம் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 6 மாதம் ஓய்வு கேட்டுள்ளதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. இலங்கை தொடரின் 2-வது டெஸ்டில் நீக்கப்பட்ட மெஹ்முதுல்லா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மெஹ்முதுல்லாவிற்கு இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்த நசிர் ஹொசைன் சிறப்பாக செயல்படாததால் நீக்கப்பட்டுள்ளார். மொசாடெக் ஹொசைனின் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் சரியாகாததால் அவருக்கு இடம்கிடைக்கவில்லை.
வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன்), 2. தமிம் இக்பால், 3. சவுமியா சர்கர், 4. இம்ருல் கெய்ஸ், 5. சபீர் ரஹ்மான், 6. மெஹ்முதுல்லா, 7. லித்தோன் தாஸ், 8. மெஹெதி ஹசன், 9. தைஜூல் இஸ்லாம், 10. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 11. ருபெல் ஹொசைன், 12. ஷபியுல் இஸ்லாம், 13. தஸ்கின் அஹமது, 14. சுபாஷிஸ் ராய், 15. மொமினுல் ஹக்யூ.