உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பையில் நேருக்கு நேர்
போட்டிகளில் | இங்கிலாந்து | பாகிஸ்தான் | டைட் |
9 | 4 | 4 | 1 |
சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அந்த ஆட்டத்தில் ஜேசன் ராய், ஜோ ரூட், இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரை சதம் விளாச 311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, ஜோப்ரா ஆர்ச்சரின் துல்லியமான வேகப்பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணியை 207 ரன்களுக்குள் சுருட்டியிருந்தது.
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் அவமானகரமான வகையில் தோல்வியை சந்தித்தது. ஆந்த்ரே ரஸ்ஸல், ஓஷன் தாமஸ் ஆகியோரது ஷாட்பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள முடியால் வெறும்21.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு சரணடைந்தது. ஷாட்பிட்ச் பந்துகளை சரியாக கையாளத் தவறிய சில பேட்ஸ்மேன்கள், கண்மூடித்தமான ஷாட்களையும் விளையாடி தங்களது விக்கெட்டை தாரை வார்த்திருந்தனர்.
தொடர்ச்சியாக 11 தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் மீண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் அதுஅவ்வளவு சுலபமாக இருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாடியது.
இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி 4-0 என இழந்தது. மேலும் இந்தத் தொடர் முழுவதுமே இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியதால் பெரும்பாலான ஆட்டங்களில் 350 ரன்கள் வரை குவிக்கப்பட்டிருந்தது. மேலும் இன்றைய போட்டி நடைபெறும் டிரென்ட்பிரிட்ஜ் மைதானம் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகநடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 444 ரன்கள் குவித்து அசத்தியிருந்தது. மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்கள் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தது.
இந்த இரு ஆட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்திலேயே இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தால் மீண்டும் ஒருமுறை பெரிய அளவிலான இலக்கை கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த போதிலும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிர் 3 விக்கெட்களை கைப்பற்றி கவனத்தை ஈர்த்திருந்தார். அவரிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் சீனியர் வீரரான ஷோயிப் மாலிக்குக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.
அணிகள் விவரம்
இங்கிலாந்து: இயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஆதில் ரஷித், லியாம் டாவ்சன், டாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளெங்கெட், மார்க்வுட்.
பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் அஸாம், மொகமது ஹபீஸ், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், ஷதப் கான், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரீடி, மொகமது அமிர், மொகமது ஹஸ்னயின், வகாப் ரியாஸ்.