கதை என்ன?
தற்போது இங்கிலாந்தில் மகளிருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்த தொடர் இப்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
ஆனால், இந்த இறுதி போட்டிக்கு முன்பு இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்ட போது இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஹர்மன்ப்ரீட் கவுருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
விவரங்கள்:
மிதாலிராஜ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பதம் பார்த்து 2-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி அதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை வரலாறு படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டன் மிதாலி ராஜ் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 392 ரன்), முந்தைய ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்த சூறாவளி ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. பூனம் ரவுத்தும் (295 ரன்), மந்தனாவும் (232 ரன்) கடந்த சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை. மந்தனா இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க லீக்கில் 90 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்றால் அது அணிக்கு வலுவூட்டுவதாக அமையும்.
அடுத்தது என்ன?
இந்த முக்கியமான போட்டிக்கு முன்பு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்ப்ரீட் கவுருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்த இறுதி போட்டியில் அவர் விளையாடுவாரா விளையாடமாட்டாரா என கேள்விகள் எழுந்தது.
இதை பற்றி இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் பேசிய போது, அவரின் தோள்பட்டையில் பனி சதுரம் வைப்பது முன்னெச்சரிக்கை தான். அது ஒரு பிரச்சனையும் இல்லை என கூறினார்.
உலகக்கோப்பையில் இந்திய அணி இரண்டாவது முறை இறுதி போட்டியில் விளையாட போகிறது. இதற்கு முன், 2005-இல் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, 98 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால், இந்த முறை செம்ம பலத்துடன் இருக்கும் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.