ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஷஷாத் காலவரையின்றி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷஷாத். அதிரடி ஆட்டக்காரரான இவர், ’ஆப்கான் தோனி’ என்று அழைக்கப்படுகிறார். உலகக் கோப்பைத் தொடர் நடந்துகொண்டிருந்தபோது, அணியில் இருந்து உடல் தகுதி காரணமாக நீக்கப்பட்டார். தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் வேண்டுமென்றே தன்னை அணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார் ஷஷாத். இது அப்போது சர்ச்சையானது.

இந்நிலையில் அவரது ஒப்பந்தத்தை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அணி வீரர்கள் வெளிநாடு சென்றால், கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை அவர் மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால் அவர், ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமில்லாமல், மற்ற டி20 தொடர்களிலும் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது
அவர் மீது வேறு சில புகார்களும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் விதிப்படி வெளிநாடு செல்லும் வீரர்கள் அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும். ஆனால், ஷாசாத் இரு முறை அனுமதி இன்றி வெளிநாடு சென்றுள்ளார். அதில் ஒரு முறை பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார்.

முகமது ஷாசாத் இந்த தடை குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் ஏற்கனவே கிரிக்கெட்டை விட்டு விலக உள்ளதாக கூறியது உண்மைதானா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இருந்தே தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டு வருகிறது. தற்போது தங்கள் அணியின் முன்னணி வீரரை தடை செய்து மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது. இது எங்கே போய் முடியுமோ?