தொடர்ச்சியாக அதிக சர்வதேச போட்டிகள் வெற்றிகள் பெற்றதில் ரோகித், விராட் கோலி 12 வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய போட்டியில் ரோகித் கேப்டனாக தோல்வி அடைந்ததன் மூலம் கோலியின் சாதனை தப்பியுள்ளது.
ட்ரெண்ட் போல்ட் 4 மெய்டன்களுடனும் பெரிய ஸ்விங்குகளுடனும் பந்து வீசி 5 விக்கெட்டுகளை 21 ரன்களுக்குக் கைப்பற்ற 92 ரன்களுக்குச் சுருண்டது இந்திய அணி. இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி 14.4 ஒவர்களில் 93/2 என்று அபார வெற்றி பெற்றது. 212 ரன்கள் மீதமிருக்கும் அளவுக்கு இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய தோல்வியாகியுள்ளது.
ஜெண்டில் மீடியம் பேஸ் வீசிய கொலின் டி கிராண்ட் ஹோம் மிகப்பிரமாதமாக ஸ்விங் செய்து பந்தை எழுப்பி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ராஸ் டெய்லர் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 37 ரன்களை எடுத்தும் ஹென்றி நிகோல்ஸ் 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். 15வது ஓவரின் 3வது பந்தை டெய்லர் டீப் மிட்விக்கெட்டில் தன் 3வது சிக்சரை அடித்து அடுத்த பந்தை கட் செய்து பவுண்டரிக்கு விரட்டி வெற்றி ரன்களை எடுத்தார்.
பெரிய அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட, தன்னிடம் ஷுப்மான் கில் அளவுக்கு 19 வயதில் திறமைகள் இருந்ததில்லை என்று விராட் கோலி விதந்தோதி எதிர்பார்ப்பை கிளப்பிய கில் ட்ரெண்ட் போல்ட் பந்தில் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார், இதனால் கிரீசுக்குள் முடக்கப்பட்டார், இதனால் முன் கால் நகராமல் வாளாவிருக்க போல்ட் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து 21 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மார்டின் கப்தில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமாரின் உள்ளே வந்த பந்தில் முன் விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார், கேன் வில்லியம்சன் பார்ம் திடீரென சரிந்ததால் பந்தை ஆடுவதா விட்டு விடுவதா என்ற சந்தேகத்தில் விட்டு விட கடைசி நேரத்தில் முடிவெடுக்க அது முடியாமல் போக புவன்ஷ்வர் பந்தை எட்ஜ் செய்து தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி 11 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் சேர்ந்து 8.2 ஒவர்களில் 54 ரன்கள் ஆட்டமிழக்கா கூட்டணி அமைத்தனர். சாஹல் 2.4 ஓவர்களில் 32 ரன்கள் விளாசப்பட்டார். இதில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விட்டுக்கொடுத்தார்.
இந்திய பேட்டிங்கை ஆட்ட நாயகன் ட்ரெண்ட் போல்ட் வார்த்தைகளை தொகுத்துக் கூற வேண்டுமெனில், “இந்திய அணியை மலிவாக வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற பிட்ச்களில் எளிதான விஷயம் என்னவெனில் பந்தை லெந்தில் வீசி ஸ்டம்பை இலக்காகக் கொண்டு வீசினால் போதும்” என்றார். இதுதான் உண்மை ட்ரெண்ட் போல்ட்டின் இந்த எளிய உண்மைக்கு இந்திய அணியின் பேட்டிங் பலவீனம் பட்டவர்த்தனமானது.
இந்தத் தோல்வியை தொடரை வென்ற பிறகான ரிலாக்ஸ் மன நிலை அல்லது அதீத நம்பிக்கை மனநிலை என்று குறுக்கி விட முடியாது, காரணம் இதே போல் பிட்ச்கள் இங்கிலாந்தில் உலகக்கோப்பையில் போடப்பட்டால்… என்ற கேள்விதான் எஞ்சுகிறது.