விராட் கோலி தோனியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தோனிதான் அனைவருக்குமான ரோல்மாடல் எனவும் இனி வருபவர்கள் அவரை பின்பற்றி நடந்தால் பலவற்றை சாதிக்கலாம் என பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கூறியுள்ளார்
டோனியை ஓய்வு பெறுமாறு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். இந்திய அணிக்கு இரண்டு உலககோப்பையை பெற்று கொடுத்து பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
37 வயதான டோனி 2014-ம் ஆண்டு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் 20ஓவர் ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த இரு நிலைகளிலும் ஆடி வந்தார்.
இதற்கிடையே 20 போட்டிக்கான அணியில் இருந்து ஓய்வு பெற்ற பெயரில் டோனி கழற்றி விடப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கப்பட்ட அவர் இனி எதிர்காலத்தில் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இடம் பெறுவது சந்தேகமே.
தற்போது மோசமான நிலையில் டோனியின் பேட்டிங் இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் உலககோப்பை போட்டி (50 ஓவர்) வரை அவர் இந்திய அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி வரக்கூடிய ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒய்வுக்கான நெருக்கடியில் அவர் இருக்கிறார்.
இந்த நிலையில் டோனியை ஓய்வு பெறுமாறு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்காக டோனி என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சாதனைகளை புரிந்தவர். இதனால் டோனி ஓய்வு பெற வேண்டும் என்று அவரிடம் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.
2019 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அவர் தேவை. அப்போது தான் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கும்.
எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார். அவரது ஆட்டம் எனக்கு பிடிக்கும். ஆனாலும் கேப்டன் பதவியில் அவர் இன்னும் நிறைய முன்னேற வேண்டும். என்னை பொறுத்தவரையில் கேப்டன் பதவியில் டோனி தான் சிறந்தவர்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான தொடர் அற்புதமாக இருக்கும். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியா முயற்சி செய்யும். இந்திய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.