ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என வங்காளதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் வலியுறுத்தியுள்ளார்.
வங்காளதேசம் கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காளதேசம் விளையாட திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்தால் இரண்டு போட்டிகளையும் பிரித்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்டில் வங்காளதேசம் படுதோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே வங்காளம் வந்து ஒரு டெஸ்டில் விளையாடியது. இன்றுடன் முடிந்த இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார். இதனால் வங்காளதேசம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கான 2-ம் கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்வது குறித்து முஷ்பிகுர் ரஹிம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் பாகிஸ்தானுக்கு செல்வார் என்று நம்புகிறேன்.
ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் பாகிஸ்தான் செல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் குடும்பம் முக்கியமானது. ஆனால், நாடு அதைவிட முக்கியமானது’’ என்றார்.
டாக்காவில் வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 22-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் கேப்டன் எர்வின் (107) சதமும், தொடக்க வீரர் மஸ்வாயுர் (64) அரைசதமும் அடிக்க ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜாயத், நயீம் ஹசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் மொமினுல் ஹக் (132) சதமும், அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் (203 அவுட் இல்லை) இரட்டை சதமும் விளாச வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 560 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 189 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியில் எர்வின் 43 ரன்களும், மருமா 41 ரன்களும், ஷிகந்தர் ரசா 37 ரன்களும் சேர்த்தனர். வங்காளதேசம் அணி சார்பில் நயீம் ஹசன் ஐந்து விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.