கிரிக்கெட் ஒரு அற்புதமான விளையாட்டு, நாம் பார்க்க பார்க்க நம்மை ஈர்த்து அதன் அருகில் உட்காரவும் வைக்கும். ஒரு வீரராக இருந்தால் நாம் ஆடுவதற்கு மிக நன்றாக இருக்கும். வெற்றி பெறும் அணியில் வீரராக இருக்க எவ்வளவு மகிழ்வாக இருக்குமோ அதே போல் தோல்வி அடையும் அணியில் இருப்பது சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கும். அதே போல் தான் ஒரு மிக மோசமான தோல்வி அரங்கேறியுள்ளது.
குண்டூரில் நடைபெற்று வரும் பிசிசிஐ யு-19 மகளிர் ஒருநாள் தொடர் லீக் போட்டி ஒன்றில் நாகாலாந்து மகளிர் அணி கேரளாவுக்கு எதிராக 2 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அபாரமாக ஆடியதை தொடர்ந்து மகளிர் கிரிக்கெட்டை ‘வளர்க்கும்’ பிசிசிஐ முயற்சியில் சிலபல போட்டிகள் இந்தத் தரத்தில்தான் உள்ளன.
இந்த 2 ரன்களில் ஒரு ரன் தான் பேட்டின் மூலம் வந்தது மற்றொரு ரன் வைடு ஆகும். ஓபனர் மென்கா 18 பந்துகளை அதிகபட்சமாக எதிர்கொண்டார். கேரளாவின் பந்து வீச்சாளினி அலீனா சுரேந்திரன் மட்டுமே 2 ரன்களை விட்டுக் கொடுத்தவராகிறார், இவர் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.
கேரளாவின் கேப்டன் மின்னு மனி 4 விக்கெட்டுகளை ரன் கொடுக்காமல் கைப்பற்றினார். இந்த 2 ரன்களுக்கு 17 ஓவர்கள் ஆடியுள்ளனர். இதில் 2 ரன்களுக்கு விக்கெட் இல்லாமல் இருந்து 2 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. 10 வீராங்கனைகள் டக் அவுட்.
நாகாலாந்து அணி இதற்கு முன்னர் ஒருபோட்டியில் 136 வைடுகள் வீசியதும் பிரசித்தம்.
மற்ற சில ஆட்டங்களில் பிஹார் அணி 21 ரன்களுக்கு சுருண்டது நிகழ்ந்துள்ளது. இதில் மேகாலாயா அணி விசேஷமாக 17 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுதான் குறைவான ஸ்கோராக இருந்தது, அதனை நாகாலாந்து யாருமே முறியடிக்க முடியாத(?) 2 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
ஒரே பந்தில் வெற்றிக்கான ரன்களை கேரள அணி எடுத்து வெற்றி பெற்றது.