டி.20 போட்டியில் டபுள் செஞ்சுரி அடிக்க இந்த ஒரு இந்திய வீரரால் மட்டும் தான் முடியும்…. அது கோலி, சூர்யகுமார் இல்லை; கேன் வில்லியம்சன் உறுதி
சவால் நிறைந்த டி.20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியும் என்றால் அது இந்திய வீரரால் மட்டும் தான் முடியும் என நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் என்றால் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இருந்த நிலையில், கடந்த 2003ம் ஆண்டு டி.20 போட்டிகள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டி.20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது நாடுகளிலும் உள்ளூர் டி.20 தொடரை நடத்தி வருகின்றன.
விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் டி.20 போட்டிகளில் பல்வேறு அரிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் தனது எதிரணிக்கு 140+ ரன்களே இலக்காக நிர்ணயிப்பதற்கே போராடி வந்தன, ஆனால் தற்போது கிட்டத்தட்ட 300 ரன்களை தொட்டுவிடும் அளவிற்கு டி.20 போட்டிக்கான பரிணாமமே மொத்தமாக மாறிவிட்டது.
என்னதான் டி.20 போட்டிகளில் பல பேட்ஸ்மேன்கள் வீடியோ கேம் விளையாடுவதை போன்று சிக்ஸர் மழை பொழிந்தாலும், இதுவரை யாருமே டி.20 போட்டிகளில் இரட்டை சதம் அடித்தது இல்லை. டி.20 போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது அவ்வளவு எளிதானது இல்லை என்பதால் யாராலுமே டி.20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியாது என நம்பப்படும் நிலையில், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவால் டி.20 போட்டியிலும் இரட்டை சதம் அடிக்க முடியும் என நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேன் வில்லியம்சன் அளித்த பேட்டி ஒன்றில், “டி.20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவால் இரட்டை சதம் அடிக்க முடியும் என நம்புகிறேன். ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அனுபவம் ரோஹித் சர்மாவிற்கு இருப்பதால் மற்றவர்களை விட ரோஹித் சர்மாவிற்கு இரட்டை சதம் அடிப்பதற்கு தேவையான சில நுணுக்கங்கள் தெரிந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே – பெங்களூர் இடையேயான போட்டியில், கிரிஸ் கெய்ல் புனே அணியின் பந்துவீச்சை சிதறடித்து 175* ரன்கள் குவித்ததே டி.20 போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக உள்ளது.