மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து.
இதன்மூலம், 3 ஒரு நாள் ஆட்டங்களையும் கைப்பற்றி மே.இ.தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து.
மழை பெய்ததன் காரணமாக 23 ஓவர்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது நியூஸிலாந்து.
நிர்ணயிக்கப்பட்ட 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மே.இ.தீவுகள் அணி 23 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து தோல்வியைச் சந்தித்தது.
முன்னதாக, நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 54 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக, கேப்டனும், விக்கெட் கீப்பருமான டாம் லதாம் 37 ரன்கள் எடுத்தார்.
மே.இ.தீவுகள் அணியின் சார்பில், ஷெல்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோல்டர், மில்லர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து, களம் இறங்கிய மே.இ.தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், மட் ஹென்றி பந்துவீச்சில் காலின் மன்றோவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
போல்ட் வீசிய 2-ஆவது ஓவரில் ஷாய் ஹோப் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் கைல் ஹோப், ஹென்றி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார்.
3 விக்கெட் இழப்புக்கு 3-ஆவது ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது மே.இ.தீவுகள் அணி. இதையடுத்து, களம் இறங்கிய ஜாசன் முகமது, 4-ஆவது ஓவரில் 1 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அதே ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான வால்டனும் ஆட்டமிழந்தார்.
மளமளவென 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருந்தது.
இதையடுத்து, கேப்டன் ஜாசன் ஹோல்டரும், பாவெல்லும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும், 11-ஆவது ஓவரில் பாவெல் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் கண்ட ஆஷ்லே நர்ஸ் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
அணி 64 ரன்கள் எடுத்திருந்தபோது நீல் ப்ரூமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் ஹோல்டர். அப்போது அவர் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். ஷெல்டன் 9-ஆவது விக்கெட்டாக வெளியேற பந்துவீச்சாளர்கள் மில்லர் 20 ரன்களுடனும், கேப்ரியல் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனினும், நிர்ணயிக்கப்பட்டிருந்த 23 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் அந்த அணியால் 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்திருந்தது.
அதிகபட்சமாக போல்ட், மிச்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ராஸ் டெய்லரும், தொடர் நாயகனாக போல்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, கடந்த 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணியே வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.
அதன்மூலம், அந்த அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை ருசித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.