கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஐசிசி யு-19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை (செவ்வாய்) இந்திய-பாகிஸ்தான் யு-19 அணிகள் மற்றொரு அரையிறுதியில் மோதுகின்றன. இந்தப் போட்டியை ஆஸ்திரேலிய அணி ஆர்வமுடன் பார்க்கும்.
பெரிய சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த அரையிறுதி ஆஸ்திரேலியாவின் எளிதான வெற்றியில் முடிந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் ஆப்கான் கேப்டன் நவீன் உல் ஹக். ஆனால் இந்த முடிவு எதிர்மறையாக முடிந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜானதன் மெர்லோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த ஆப்கான் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலக்கை விரட்டும் போது புதிர் ஸ்பின்னர் முஜீப் ஸத்ரானை தொடக்க வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் எதிர்த்தாக்குதல் நடத்தி ஒரே ஓவரில் 14 ரன்களை எடுத்தார். இவர் 40 பந்துகளில் அரைசதம் கண்டார்.
ஆஸ்திரேலியாவின் ஜேசன் சங்கா, மெர்லோ ஆகியோரை குவைஸ் அகமட் லெக்ஸ்பின்னில் பெவிலியன் அனுப்பினார். ஆனால் ஆஸி. வீரர் பரம் உப்பல், நேதன் மெக்ஸ்வீனி ஸ்பின் அச்சுறுத்தலை முதிர்ச்சியுடன் எதிர்கொண்டு 53 ரன்கள் கூட்டணி அமைத்தனர். உப்பல் 32 நாட் அவுட்டாகத் திகழ ஜேக் எட்வர்ட்ஸ் 65 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுக்க, மெக்ஸ்வீனி 22 நாட் அவுட். 37.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 182/4 என்று வெற்றி பெற்றது.
முன்னதாக ஆப்கான் அணியில் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி 119 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 80 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். கடைசி 8 விக்கெட்டுகளை 101 ரன்களுக்கு இழந்தது ஆப்கான். ஜே.மெர்லோ 10 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஜேக் எட்வர்ட்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.