ஒரே வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் ஆகி இலங்கை மோசமான சாதனை

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி ஒரே வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் ஆகிய முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. நான்கு போட்டிகளில் தொடர்ந்து பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 103 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முதல் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியால் டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை, ஒருநாள் தொடரை 0-5 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது.

இதற்கு முன் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 0-5 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. பின்னர் இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 0-5 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஒயிட்வாஷ் ஆனது.

இதன்மூலம் ஒரே வருடத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று முறை ஒயிட் வாஷ் ஆகிய முதல் அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது இலங்கை.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.