வெலிங்டன் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 5-0 என்று கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் 126 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 100 ரன்கள் எடுக்க, அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. பாக். அணியில் ருமான் ரயீஸ் 3 விக்கெட்டுகளையும் பாஹிம் அஷ்ரப் 2 விக்கெட்டுகளையும் ஆமிர் யாமின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 57/5 என்ற நிலையிலிருந்து பின்கள வீரர்களின் அசாத்திய விரட்டலினால் 256 ரன்கள் வரை வந்து 49வது ஓவரில் ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணியில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டிரெண்ட் போல்ட்டுக்கு பதில் வந்த மேட் ஹென்றி அபாரமாக வேகம் காட்டி பகர் ஜமான் ஹெல்மெட்டில் ஒன்று கொடுத்தார் , ஒரு கேட்ச் விடப்பட்டது, கடைசியில் 12 ரன்களில் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்து வெளியேற்றப்பட்டார். உமர் அமின் (2), கோலியுடன் ஒப்பிடப்பட்ட பாபர் ஆஸம் (10) ஆகியோரையும் ஹென்றி வீட்டுக்கு அனுப்ப பாகிஸ்தான் 31/3. இந்தத் தொடரில் பாபர் ஆஸம் 31 ரன்களை 6.20 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மொகமது ஹபீஸ் (6), லாக்கி பெர்கூசன் வீசிய ஷார்ட் பிட்ச் ஆஃப் ஸ்டம்ப் பந்தை தரையில் அடித்து ஆடாமல் நேராக எக்ஸ்ட்ரா கவர் பீல்டரிடம் கேட்ச் ஆனது. கேப்டன் சர்பராஸ் அகமட் 3 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேற பாகிஸ்தான் 17வது ஓவர் முடிவில் 57/5 என்று நிலைதடுமாறியது.
ஆனால் இந்த நிலையிலிருந்தும் வெற்றிக்கு முயற்சி செய்ய முடியும் என்றால் அது பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும், அப்படித்தான் ஆடினார்கள் ஹாரிஸ் சோஹைல் (63), ஷதாப் கான் (54). 20.2 ஓவர்களில் 105 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
வெற்றிக்கான ரன் விகிதம் எகிற இருவருமே ஆட்டமிழந்தனர். பிறகு பாஹிம் அஷ்ரப் (23), அமீர் யாமின் (32), மொகமது நவாஸ் (23) ஆகியோர் 49 வது ஓவர் வரை இட்டுச் சென்றனர். ஸ்கோர் 256 ரன்கள் வந்த போது பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி மார்டின் கப்தில் சதம் மற்றும் ராஸ் டெய்லரின் 59 ரன்கள் மூலம் 112 ரன்கள் கூட்டணி அமைய 271 ரன்கள் எடுத்தது. மார்டின் கப்தில் 13-வது ஒருநாள் சதம் எடுத்தார், டெய்லர் 58வது அரைசதம் கண்டார்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக மார்டின் கப்தில் தேர்வு செய்யப்பட்டார்.