பாகிஸ்தானை சொந்த மண்ணில் வைத்து சம்பவம் செய்த இங்கிலாந்து… டெஸ்ட் தொடரை கைப்பற்றியது!

2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 26 ரன்கள் வித்தியசாத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் டிசம்பர் 9ஆம் தேதி துவங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

முதல் போட்டியை போலவே அதிரடியாக ஆரம்பித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 281 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பென் டக்கட் 63 ரன்கள், ஆலி பாப் 60 ரன்கள் அடித்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு அறிமுக வீரர் அப்ரார் அகமது ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடிக் கொண்டிருந்தது. பாபர் அசாம் 75 ரன்கள், சகீல் 63 ரன்கள் அடித்திருந்தனர். ஒரு கட்டத்தில் 142 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான அணி, வரிசையாக விக்கெடுகளை இழந்து 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 79 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பென் டக்கட் இப்போட்டியிலும் 79 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடி வந்த ஹாரி ப்ரூக் 108 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

கடைசி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி 275 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 354 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

355 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்று தொடரை சமம் செய்யலாம் என்ற முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அப்துல்லா 45 ரன்கள், முகமது ரிஸ்வான் 30 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த சவுத் சகீல் மற்றும் இமாம்-உல்-ஹக் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். துரதிஷ்டவசமாக இமாம் 60 ரன்களுக்கு அவுட்டானார்.

பிறகு உள்ளே வந்த முகமது நவாஸ் விக்கெட் விடாமல் போராடி 45 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் நங்கூரம்போல நின்று நம்பிக்கை கொடுத்து வந்த சவுத் சகீல் சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். இவர் 94 ரன்கள் அடித்தப்பின் வெளியேறினார்.

அடுத்து வந்த வீரர்களும் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்காமல் ஆட்டமிழக்க 328 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது. இதனால் 26 ரன்கள் வித்தியசாத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றியது.

Mohamed:

This website uses cookies.