ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டோனி ஒரு ‘GOAT’ என ஒரே வார்த்தையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் பதில் கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக மட்டும் செயல்பட்டு வருகிறார்.
கிரிக்கெட் போட்டியின்போது எந்தவொரு சூழ்நிலையிலும் பதற்றம் அடையாமல் பக்குவமாக விளையாடுவார். இவரை எதிரணி வீரர்களுக்கும் பிடிக்கும். பெரும்பாலும் அமைதியாக காணப்படும் டோனி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் இலங்கை அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐ.சி.சி உலக லெவன் அணி தற்போது பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடுகிறது. உலக லெவன் அணிக்கெதிரான பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் இடம்பிடித்துள்ளார்.
சானியா மிர்சாவின் கணவரான இவர் சமூக இணைய தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது டோனி குறித்து ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.
இதற்கு சற்றும் யோசிக்காமல் ‘GOAT’ என்று கூறினார் சோயிப். இதனால் அந்த ரசிகர் பூரித்துப் போனார். விளையாட்டில் எதிரும் புதிருமாக இருந்தாலும் டோனியை பிடிக்காத வீரர்கள் யாரும் இல்லை என்பதற்கு இது சிறந்த சான்று.