வரலாறு யார் பக்கம்? உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்! 1

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், இலங்கையும் மல்லுகட்டுகின்றன.

1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் வெறும் 105 ரன்னில் ‘சரண்’ அடைந்தது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக விசுவரூபம் எடுத்த பாகிஸ்தான் 348 ரன்கள் குவித்ததோடு, வெற்றியையும் வசப்படுத்தியது. 1996-ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணியின் நிலைமையும் இதே தான். நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்னில் சுருண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி, அடுத்த ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

3rd June 2019, Trent Bridge, Nottingham, England; ICC World Cup Cricket, England versus Pakistan; Pakistan celebrate the fall of the third England wicket after England captain Eoin Morgan is bowled by Mohammad Hafeez of Pakistan (Photo by Alan Martin/Action Plus via Getty Images)
இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் மெச்சும்படி இல்லை. கேப்டன் கருணாரத்னே, விக்கெட் கீப்பர் குசல் பெரேரா மட்டுமே நம்பிக்கையுடன் ஆடுகிறார்கள். மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்புகிறார்கள். குறிப்பாக முன்னாள் கேப்டன் மேத்யூஸ் இரண்டு ஆட்டத்திலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பாகிஸ்தானை பதம் பார்க்க வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்கள் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமாகும்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும். உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இலங்கையிடம் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிரான 7 ஆட்டங்களிலும் பாகிஸ்தானே வாகை சூடியிருக்கிறது. அந்த சிறப்பு இந்த உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு தொடருமா? அல்லது இலங்கை வீரர்கள் மோசமான சரித்திரத்தை மாற்றிக் காட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.வரலாறு யார் பக்கம்? உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்! 2

ஒட்டுமொத்த ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 153 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 90-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. எஞ்சிய 4 ஆட்டங்களில் முடிவில்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 6 ஆட்டங்களில் பாகிஸ்தானே வெற்றி கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, உதனா அல்லது ஜெப்ரே வாண்டர்சே, லக்மல் அல்லது ஜீவன் மென்டிஸ், மலிங்கா, நுவான் பிரதீப்.

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷதப் கான், முகமது அமிர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *