துபாயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட துபாய் சென்றுள்ளது. முதலில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது.

அதன்பின்னர் அஸாமுடன், முகமது ஹபீஸ் ஜோடி சேர்ந்தார். ஹபீஸ், 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஷோயப் மாலிக் களமிறங்கினார். ஒரு முனையில் நிலைத்துநின்று ஆடிய அஸாம் அரைசதம் அடித்தார். மாலிக்கும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார். அஸாம் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து லக்மல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் குவித்தது, இமாத் வாசிம் 10 ரன்களுடனும், ஹசன் அலி 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 293 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். டிக்வெல்லா 19 ரன்களிலும், தரங்கா 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய சந்திமால் 4 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 2 ரன்களிலும், மிலிந்தா சிரிவர்தனா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 15.6 ஓவர்களில் 67 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன்பின் திரிமன்னேவுடன், பெரரா ஜோடி சேர்ந்தார். பெரரா, 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய திரிமன்னே 53 ரன்கள் எடுத்து டயீஸ் வேகத்தில் போல்டானார். அதன்பின் களமிறங்கிய அகிலா தனன்ஜயா 50 ரன்களும், ஜெஃப்ரி வண்டெர்சே 25 ரன்களும் எடுத்தனர்.
50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ரும்மான் ரயீஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். 61 பந்துகளில் 81 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 16-ம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.