அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அர்பன் தத்தா மாவட்ட அளவிலான ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
அசாம் மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான அணிகளுக்கு இடையில் நுருதின் அகமது டிராபி நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில் சிவசாகர் – சாரைடியோ அணிகள் மோதின. சாரைடியோ அணி பேட்டிங் செய்யும்போது சிவசாகர் அணியைச் சேர்ந்த 25 வயது இடது கை சுழற்பந்து வீச்சாளரான அர்பன் தத்தா 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
அவர் 19 ஓவரில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, சாரைடியோ 121 ரன்னில் ஆல்அவுட் ஆனது. என்றாலும் இந்த போட்டி டிராவில் முடிந்துள்ளது. அர்பன் தத்தா அசாம் மாநில அணிக்காக U-19 உள்பட பல அணிகளில் இடம்பிடித்து விளையாடியுள்ளார். கடந்த ரஞ்சி டிராபி தொடருக்கான அசாம் அணியில் இடம் பிடித்திருந்தார்.

மிரட்டலான ஸ்பெல் வீசிய அர்பனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் அசாமில் நடத்தப்படும் பல கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகிறார். .
எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டுமென்பது நிச்சயம் ஒவ்வொரு பவுலரின் கனவாகும். ஜிம் லேகர் மற்றும் அணில் கும்ப்ளே மட்டுமே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர்.
தவிர, தேபாஷிஷ் மொஹந்தி, சுபாஷ் குப்தே, பிரதீப் சுந்தராம் மற்றும் பிஎம் சாட்டார்ஜி ஆகிய வீரர்கள், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் இச்சாதனையை படைத்துள்ளனர். கடந்த வருடம், மணிப்பூரைச் சேர்ந்த இளம் வீரர் ரெக்ஸ் சிங், அண்டர் 19 கூச் பெஹர் டிராபி தொடரில், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.