“நாங்க நிஜமாவே நல்லா பண்ணோம், எங்க தப்பு நடந்துச்சுன்னா” – 1 ரன் தோல்விக்கு திரும்பவும் புலம்பிய பாபர் அசாம்!

ஜிம்பாப்வே அணியுடன் ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது பற்றி மீண்டும் மீண்டும் புலம்பியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

டி20 உலகக் கோப்பை தொடர் பாகிஸ்தான் அணிக்கு சற்று மோசமாக துவங்கியிருக்கிறது என்று கூறலாம். முதல் போட்டியில் இந்திய அணியிடம் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. அடுத்ததாக ஜிம்பாவே அணியுடன் நடைபெற்ற போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இரண்டு போட்டிகளிலும் நூல் நிலையில் தோல்வியை தழுவியதால் புள்ளிகள் ஏதும் இன்றி கடைசியில் இருக்கிறது. தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதிலும் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு சூப்பர் 12 சுற்றில் இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. மூன்றையும் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறலாம். ஏற்கனவே இதே க்ரூப்பில் இரண்டு புள்ளிகளுடன் வங்கதேசம் அணியும், தலா 3 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் இருக்கின்றன. 4 புள்ளிகளுடன் இந்திய அணி இருக்கிறது.

சூப்பர் 12 சுற்றின் இரண்டு க்ரூப்பில் தலா இரண்டு அணிகள் மட்டுமே தேர்வாக முடியும். ஆகையால் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியின் போது, எந்த இடத்தில் தவறு நடந்தது என்பது பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் பாபர் அசாம்.

“நாங்கள் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மூன்றிலும் நன்றாக செயல்பட்டோம். ஒரு அணி வீரராகவும், கேப்டனாகவும் இந்த தோல்வியை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சதகமாக இருக்கும் என்று நாங்கள் எண்ணவில்லை. ஆகையால் கூடுதல் வேகப்பந்துவீச்சாளுடன் களமிறங்கினோம்.

ஜிம்பாப்வே அணிக்கு சுழல் பந்துவீச்சு நன்றாக ஈடுபட்டது. சுழல் பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டார்கள் என்று கூற வேண்டும். துவக்கத்தில் ரிஸ்வான் மற்றும் நான் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு, சதாப் கான் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த பிறகு அடுத்து வந்த வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டனர். அந்த இடத்தில் தான் மிகப்பெரிய தவறு நேர்ந்தது

மேலும் நாங்கள் இன்னொரு சுழல் பந்துவீச்சாளரை களமிறக்கி பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று தோணுகிறது. அங்கும் தவறு நேர்ந்திருக்கிறது.” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.