ஐ.பி.எல். ஏலத்தை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட வேண்டாம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.12½ கோடிக்கு ஏலம் போனார்.

அவருக்கு அடுத்தப்படியாக இந்திய வீரர்கள் ஜெயதேவ் உனட்கட் ரூ.11½ கோடிக்கும், மனீஷ் பாண்டே, ரகானே தலா ரூ.11 கோடிக்கும் ஏலம் போனார்கள்.
இந்த நிலையில் ஐ.பி.எல். பணத்தை வைத்து வீரர்களின் திறமையை தீர்மானிக்க கூடாது என்று முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டி என்பது தேவை மற்றும் வழங்கலை (சப்ளை) அடிப்படையாக கொண்டது. ஐ.பி.எல். பணத்தை அடிப்படையாக வைத்து வீரர்களை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா) ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகவில்லை. ஆனால் அவர் சர்வதேச போட்டியில் 54 சதங்கள் அடித்து இருந்தார்.
டெல்லியை சேர்ந்த இஷான் கிஷன் ரூ.6.2 கோடி ஏலம் போனார். அவர் ரஞ்சி போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் குறைந்த சர்வதேச அனுபவம் பெற்ற ஜெயதேவ் ரூ.11½ கோடிக்கு விலை போய் இருக்கிறார். எனவே ஐ.பி.எல். எந்த ஒரு வீரரின் மதிப்பையும் தீர்மானிக்கும் அளவு கோல் அல்ல. ஐ.பி.எல். ஏலத்தை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட வேண்டாம்.
இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பராக கருதப்படும் விர்த்திமான் சகாவை ஐதராபாத் அணி ரூ.5 கோடிக்கு எடுத்தது. ஆனால் தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணி ரூ.7.4 கோடிக்கு வாங்கி உள்ளது.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.