மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இந்திய அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இந்திய அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இ-மெயில் வந்துள்ளது. அதில் மேற்கிந்திய தீவுகள் நாட்டில் உள்ள இந்திய அணியின் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த மின்னஞ்சலை ஐ.சி.சி-க்கு அனுப்பியுள்ளது. பின்னர் அந்த மின்னஞ்சல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் கிடைத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ‘மெயில்’ இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) அனுப்பப்பட்டது.
இந்த விவகாரம் மத்திய அரசின் காதுக்குச் செல்ல, வெளியுறவு அமைச்சகம் மூலம் ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இந்திய வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைமை அதிகாரி ராகுல் ஜோரி கூறுகையில்,‘‘ மிரட்டல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆன்டிகுவாவில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். மும்பை போலீசிடமும் தெரிவிக்கப்பட்டது. விண்டீசில் உள்ள வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

மற்றொரு நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘வீரர்களுக்கு மிரட்டல் என்பது பொய்யான தகவல் என்ற போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய வீரர்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் ‘பைலட்’ வாகனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.
இந்திய வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ரத்து செய்யவும், வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.