அஜிங்க்யா ரகானேவை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து இருக்கிறது சிஎஸ்கே அணி.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 2:30 மணி அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது. இதில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர்.
நட்சத்திர வீரர்களான சாம் கரண் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உட்பட உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட இளம் வீரர்கள் பலரும் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் பங்கேற்று மயங்க் அகர்வாலை 7.75 கோடி வரை ஏலம் கேட்டு போட்டியிட்டது. ஆனால் இறுதியாக 8.5 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை எடுத்துவிட்டது.
அடுத்ததாக வந்த அஜிங்க்யா ரகானேவை யாரும் கேட்க முற்படவில்லை. ஏனெனில் சமீபகாலமாக அவர் டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. அந்த தருணத்தில் சிஎஸ்கே அணி உடனடியாக தலையிட்டு 50 லட்சம் ரூபாய்க்கு அவரை எடுத்தது.
சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வே இருவரும் துவக்க வீரர்களாக இருக்கின்றனர். கூடுதல் துவக்க வீரராக ரகானே பயன்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடி வந்த ராபின் உத்தப்பா அனைத்துவித போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவரது இடத்தை நிரப்புவதற்கும் ரகானே சரியான வீரராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தோனி ரகானேவை எப்படி பயன்படுத்துவார்? பிளேயிங் லெவனில் இருப்பாரா? மாட்டாரா? என்பது பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வரை சிஎஸ்கே அணி இவரை மட்டுமே ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.