உலகக்கோப்பை 2019-ல் தென் ஆப்பிரிக்கக் கனவுகள் உடைந்து சின்னாபின்னமாக தற்போது டி20 உலகக்கோப்பைக்குத் தயார்படுத்தும் ஒரு தொலைநோக்குடன் குவிண்டன் டி காக் கேப்டனாக்கப்பட்டுள்ளார். இந்த புதிய கேப்டனுடன் புதுமுக தெ. ஆப்பிரிக்க அணி தரம்சலாவில் நாளை விராட் கோலி தலைமை இந்திய அணியை முதல் டி20 போட்டியில் எதிர்கொள்கிறது.
இந்த தென் ஆப்பிரிக்க அணியில் சில வீரர்கள் இந்திய சூழலுக்கு தகவமைத்துக் கொள்வதற்காக பெங்களூருவில் கடந்த மாதம் ஸ்பின் முகாமில் பயிற்சியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த தென் ஆப்பிரிக்க அணி இளம் அணி அவ்வளவாக அனுபவம் இல்லாதது.
மாறாக இந்தியாவின் டாப் ஆர்டரான ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கேப்டன் விராட் கோலி 219 டி20 போட்டிகள் அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குவிண்டன் டி காக், புதிய நட்சத்திரம் வான் டெர் டியூஸன் ஆகியோர்தான் இந்த அணியில் அனுபவ வீரர்கள்.
இந்திய அணி வெற்றிகளை குவித்து வருவதால் பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை, இந்த இந்திய அணியிடம் ஒரு பாசிட்டிவ் அம்சம் என்னவெனில் தோல்வி பயம் என்பதே இல்லாமல் ஆடுவதுதான். முன்பெல்லாம் அந்தப் பயமே பெரிய வீரர்களின் பார்மையும் காலி செய்து விடும். ஆனால் இப்போது கோலி தலைமையில் ஒரு ஒருமித்த ஆக்ரோஷ மனோ நிலை, ஒருவகையான ‘எப்படியிருந்தாலும் வெல்வோம்’ என்ற வகை மனோ நிலை வளர்ந்துள்ளது, இது ஒருவகையில் பல விமர்சனங்களுக்கிடையே பாராட்டத்தக்கதே.
தோனி ‘நீக்கப்பட்டுள்ளார்’ என்று கூறும் தைரியம் ஒருவருக்கும் இல்லாதபட்சத்தில் தோனி இல்லாத புதிய மிடில் ஆர்டரான ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த் ஆகியோர் தங்கள் திறமைகளை நிரூபிக்க இன்னொரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல் குல்தீப் யாதவ், சாஹல் என்று வழக்கமான பாணி இல்லாமல் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர், குருணால் பாண்டியா, புதிய லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர், வேகப்பந்து வீச்சில் நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கதே. உறுதுணையாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளார்.