உடல்நலக்குறைவினால் அவசரமாக பெங்களுருவிற்கு சென்றுள்ளார் ராகுல் டிராவிட்.
ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியை முடித்த பிறகு, அணி வீரர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் திருவனந்தபுரத்திற்கு மூன்றாவது ஒருநாள் போட்டிகாக சென்றுள்ளனர்.
அதேநேரம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியினருடன் செல்லாமல், அதிகாலை விமானத்தில் பெங்களூரு சென்றுள்ளார். உடலநலக்குறைவு காரணமாக ராகுல் டிராவிட் அணியினருடன் பயணிக்கவில்லை. பெங்களூருவில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார் என தகவல்கள் வெளிவந்தது.
ராகுல் டிராவிட் உடன் விமானத்தில் பயணித்த ரசிகர்கள் ஒருவர், அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது இணையத்தில் வைரல் ஆனது. இதனால் அணி நிர்வாகம் தரப்பிலிருந்து கொடுத்த விளக்கத்தில், ராகுல் டிராவிட் தனது உடல்நிலை மற்றும் சொந்த காரணங்களுக்காக பெங்களூருவிற்கு சென்று இருக்கிறார் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் இருப்பார். அதற்காக சனிக்கிழமை அணியினருடன் இணைந்துவிடுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது என்பதால், சம்பிரதாய அடிப்படையில் மூன்றாவது போட்டி நடத்தப்படும்.
இந்த மூன்றாவது போட்டி குறித்தும், பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்தும் இரண்டாவது போட்டியின் முடிவின்போது ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், “மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் லெவன் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. ஏனெனில் அடுத்த எட்டு மாதங்களுக்கு நடைபெறும் ஒருநாள் தொடர்கள் அனைத்தும் 50-ஓவர் உலகக்கோப்பையை மையமாகக்கொண்டு நடத்தப்படுகிறது. ஆகையால் போதிய வரை பெரிய மாற்றங்கள் இருக்காது. அதேநேரம் முன்னணி வீரர்களை முழு ஃபிட்டாக வைத்துக்கொள்வதும் முக்கியம். அதையும் நாங்கள் கவனத்தில் கொண்டு பிளேயிங் லெவனை தேர்வு செய்வோம்.
இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரையும் மனதில் வைத்துக் கொண்டுதான் கேட்கிறீர்கள் என எனக்கு புரிகிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால், மைதானத்திற்கு ஏற்றவாறு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.” என தெரிவித்தார்.