இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மழை குறுக்கீட்டால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வந்தது.
கார்டிப்பில் இன்று நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 7வது போட்டியில் நன்றாக தொடங்கிய இலங்கை அணி ஆப்கான் ஆஃப் ஸ்பின்னர் முகமது நபியின் ஒரே ஓவரில் சரிவு கண்டு தற்போது கடுமையாகத் திணறி வருகிறது.
டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் குல்பதின் நயீப் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார், ஆனால் கிரீன் டாப் பிட்சில் ஆப்கான் பவுலர்கள் தொடக்கத்தில் சரியாக வீசவில்லை.

இதனைப் பயன்படுத்தி கருணரத்னே (30), குசல் பெரேரா இணைந்து 13 ஒவர்களில் 92 ரன்கள் என்ற அபாரத் தொடக்கத்தைக் கண்டது, ஆப்கான் தொடக்க பவுலர்கள் ஹமித் ஹசன், சத்ரான் ஆகியோர் சரியாக விசவில்லை, ஸ்பின்னர் முஜிபுர் ரஹ்மானும் 3 ஓவர் 18 ரன்கள் என்று சொதப்பினார்.
கருணரத்னே 30 ரன்களில் முகமது நபியின் பந்து வீச்சில் வெளியேறிய பிறகு திரிமானே (25), குசல் பெரேரா இணைந்து ஸ்கோரை 144 ரன்களுக்கு உயர்த்தினர்.
ஆனால் இன்னிங்சின் 22வது ஓவரில்தான் முகமது நபி திருப்பு முனையை ஏற்படுத்தி ஒரே ஒவரில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து இலங்கையை நிலைகுலையச் செய்தார். இந்த ஓவரின் 2வது, 4வது, 6வது பந்துகளில் திரிமானே, மெண்டிஸ், எல்லாவற்றுக்கும் மேலாக அனுபவ வீரர் மேத்யூஸ் ஆகியோரை வீழ்த்த 22 ஓவர் முடிவில் 144/4 என்று ஆன இலங்கை அணி அதன் பிறகு டிசில்வாவை ஹமித் ஹசனிடமும் பார்மில் உள்ள திசர பெரேராவை ரன் அவுட்டுக்கும் இழந்து தற்போது 173/6 என்று ஆடி வருகிறது.
தொடக்க வீரர் குசல் பெரேரா 75 ரன்களுடனும் இசுரு உதானா 8 ரன்களிலும் ஆடி வருகின்றனர். முகமது நபி 8-028-4 என்று அசத்தியுள்ளார்.

மேலும் 1999 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒரே ஓவரில் உலகக்கோப்பையில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்த பெருமையைப் பெற்றார் நபி. 1999 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஹாட்ரிக் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 33 ஆவது ஒவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.