சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சமீபத்தில் தேர்வான சுரேஷ் ரெய்னா, சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராகச் சதமடித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் சமர்த் சிங் ஆட்டமிழக்க களமிறங்கினார் ரெய்னா. ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரெய்னா.

முகேஷ் குமார் வீசிய நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடித்தார். பிறகு அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் எடுத்ததால் பவ்ர்பிளே-யில் உத்தர பிரதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. பிறகு ரெய்னாவுடன் இணைந்த அக்ஷ்தீப் நாத் நல்ல இணையாக விளங்கினார்.
22 பந்துகளில் அரை சதமெடுத்தார் ரெய்னா. பிறகு 49 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 4-வது டி20 சதமாகும். இறுதி வரை ஆட்டமிழக்காத ரெய்னா, 59 பந்துகளில் 7 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் குவித்தார். அக்ஷ்தீப் 43 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

உத்தர பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.
இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பை, ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என முக்கியமான 3 போட்டிகளிலும் சதமெடுத்துள்ள சுரேஷ் ரெய்னா, சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் சதமெடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.