அடுத்த வருடம் வெளியாகுகிறது முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாற்று படம்
இந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை கனவை முதலில் நனவாக்கிய முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்து சச்சின் டெண்டுல்கரின் படம் வெளியானது, மேலும் அடுத்ததாக யுவராஜ் சிங், டிராவிட் உள்ளிட்டோரின் வாழ்க்கைகளும் விரைவில் திரைப்படங்களாக தயாரிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை கனவை முதலில் நனவாக்கிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறு குறித்த படமும் “83” என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதன் நினைவாக இப்படத்திற்கு “83” என்று பெயர் வைக்கப்பட்டது.
இதில் கபில் தேவ் வேடத்தில், சமீபத்தில் வெளியான “பத்மாவத்” திரைப்படத்தின் மூலம், புகழின் உச்சத்தை தொட்டிருக்கும் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக அப்படத்தை தயாரிக்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே போல் இந்த படத்தை கபீர் கான் இயக்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படமானது 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.