டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
11-வது ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வ் ஷா மற்றும் மேக்ஸ்வெல் களமிறங்கினர். மேக்ஸ்வெல் 2 ரன்களுடன் ரன் அவுட் முறையில் வெளியேற கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் பிரிதிவ் ஷா இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். பிரித்வ் ஷா 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்கள் எடுத்து கவுல் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஏடி ஹேல்ஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹேல்ஸ் 45 ரன்களுடனும் ஷிகர் தவான் 33 ரன்களுடனும் எடுத்தனர். இருவரும் மிஸ்ரா பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினர். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். இருப்பினும் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. களத்தில் யூசுப் பதான் மற்றும் வில்லியம்சன் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை டெல்லி அணி வீரர் கிருஷ்டியன் வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் இரண்டு ரன்களும் இரண்டாவது பந்தில் சிக்ஸரும் மூன்றாவது பந்தில் பவுண்டரியும் அடித்து ரசிகர்களுக்கு யூசுப் பதான் விருந்து படைத்தார். ஆட்டத்தின் வின்னிங் ஷாட்டை வில்லியம்சன் அடிக்க 19.5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.