ஐபிஎல்லில் தான் பந்துவீசியதில் எந்த 3 வீரர்களுக்கு பந்துவீசுவது கடினம் என்று ரஷீத் கான் தெரிவித்துள்ளார். 21 வயதே ஆன ஆஃப்கானிஸ்தானின் இளம் வீரர் ரஷீத் கான், தன் கிரிக்கெட் கெரியரின் ஆரம்பத்திலேயே சர்வதேச அளவில் மிகப்பிரபலமடைந்துவிட்டார். ரிஸ்ட் ஸ்பின்னரான அவர், 16 வயதிலேயே ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுகமாகிவிட்டார்.
2015ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுகமான ரஷீத் கான், 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். இளம் வயதிலேயே, ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை எல்லாம் தனது சுழலின் மூலம் திணறடித்துவருகிறார்.
பவுலிங்கில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கக்கூடியவர் ரஷீத் கான். தரமான ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். ஐபிஎல் உட்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவரும் ரஷீத் கான், உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.
ஐபிஎல்லில் கடந்த 2017 சீசனில் முதன்முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், முதல் சீசனிலேயே 14 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை மூன்று சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியுள்ள ரஷீத் கான், 46 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
விராட் கோலி, ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசியுள்ள ரஷீத் கான், ஐபிஎல்லில் எந்த 3 வீரர்களுக்கு பந்துவீசுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ரஷீத் கான், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரசல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூவருக்கும் பந்துவீசுவது கடினம் என்று தெரிவித்தார்.
தோனி, ரோஹித் சர்மா, கோலி, வார்னர் ஆகிய அதிரடி வீரர்களின் பெயர்களை ரஷீத் கான் சொல்லவில்லை.