நியுஸிலாந்து மைதானத்தில் சாஹல், குல்தீப் இருவரும் சேர்ந்து ஆடுவது அல்லது ஒருவர் ஆடுவது பற்றி அந்தந்த கணத்தின் தேவை பொறுத்து தீர்மானிப்போம் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் தற்போது வெற்றி என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புதுமையை நோக்கி அடியெடுத்து வைத்தாலும் இன்னும் பழைய மனோநிலையையே பிட்ச் உள்ளிட்டவற்றில் கடைபிடிக்கிறது, குறிப்பாக தோனி, கோலி தலைமையில் இங்கு டெஸ்ட் போட்டிகளுக்கும் சிலபல ஒருநாள் போட்டிகளுக்கும் போடப்படும் பிட்ச் ஒரு டெம்ப்ளேட் தன்மையை கொண்டிருக்கிறது. இதனால்தான் டாஸ் பற்றி கவலையில்லை விரட்டினாலும் இலக்கை நிர்ணயித்தாலும் கவலையில்லை என்ற பேச்சு கோலியிடமிருந்தும் ரவிசாஸ்திரியிடமிருந்தும் புறப்படுகிறது.
உதாரணமாக சமீபத்தில் ஆஸி.க்கு எதிராக போடப்பட்ட பிட்சில் முதல் போட்டியில் பந்துகள் கொஞ்சம் ஸ்விங் ஆகி, கொஞ்சம் எழும்பி, சற்றே நின்று வந்த மும்பை பிட்சில் இந்திய பேட்டிங் சரிவு கண்டு 10 விக்கெட்டுகளில் தோற்றதைக் கண்டோம். ஆனால் அடுத்த 2 போட்டிகளில் 1990-2000ம்களில் கடைப்பிடிக்கப்பட்ட அதே பழைய முறை பிட்சுக்கு இந்திய அணி நிர்வாகம் திரும்பியது, அதாவது முதலில் யார் பேட் செய்தாலும் எவ்வளவு ரன் எடுத்தாலும் பின்னால் இறங்கும் அணி டிபிக்கல் இந்தியப் பிட்சில் எதிரணியினர் ஆட முடியாதவாறு அமைக்கப்பட்டது, அதாவது பந்துகள் மந்தமாக தாழ்வாக வரும் பிட்ச்கள் அவை.
ஆனால் இவ்வகை பிட்ச்களில் இந்திய அணி விரட்டும் போது மந்தமாக, தாழ்வாக வருவது ஒரு பிரச்சினையில்லை ஏனெனில் இப்படிப்பட்ட பிட்ச்களில் ஆடியே பழக்கப்பட்ட அணியாகும் இந்திய அணி. ஆகவேதான் அடுத்த 2 போட்டிகளில் டாஸ் ஒரு பிரச்சினையில்லாமல் வெற்றி பெற முடிந்தது, பந்துகள் மெதுவாகவும் இடுப்புக் கீழே வரும் போது இந்திய பேட்டிங் ஸ்டார்கள் ’கத்தி’ வீச முடிந்தது.
ஆனால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்தில் பிட்ச்கள் உண்மைத்தன்மை கொண்டவையாக இருக்கும், அங்கு டாஸ், பிட்ச், சூழ்நிலை, அணிச்சேர்க்கைப் பற்றிய கவலையில்லாமல் ஆடுவது கடினம்.
இந்நிலையில் ரவிசாஸ்திரி கூறியதாவது:
டாஸ் என்ற விவகாரத்தை சமன்பாட்டிலிருந்து நீக்கி விட்டோம். என்ன சூழ்நிலைகளாக இருந்தாலும் விளையாடுவோம். எந்த எதிரணியினராக இருந்தாலும் அந்த மண்ணிலேயே வெற்றி பெற தயாராகி வருகிறோம் இந்தச் சவாலை நோக்கித்தான் பயணிக்கிறோம்.
சாஹல், குல்தீப் இருவரும் சேர்ந்து ஆடுவது பற்றி அந்தந்த கணத்தின் தேவை பொறுத்து தீர்மானிப்போம் என்றார்.