இறுதி போட்டிக்காகவே 3 நாள் பயிற்சி எடுத்தேன்… இறுதி போட்டியில் ரோஹித் சர்மா எனக்கு வாய்ப்பு கொடுக்காததற்கு காரணம் இது தான்; மவுனம் கலைத்த அஸ்வின்
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கான ஆடும் லெவனில் தனக்கு இடம் கொடுக்கப்படாததற்கான காரணத்தை ரவிச்சந்திர அஸ்வின் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்றது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வினுக்கு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் பல சாதனைகள் படைத்திருப்பதால், உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு நிச்சயம் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி போட்டியிலும் அஸ்வினுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வினுக்கு இடம் கொடுக்காததும் ஒரு காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வரும் நிலையில், இறுதி போட்டியில் தனக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காததற்கான காரணத்தை ரவிச்சந்திர அஸ்வினே தற்போது ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ரவிச்சந்திர அஸ்வின் பேசுகையில், “நான் இறுதி போட்டிக்கான ஆடும் லெவனில் எனக்கு இடம் கிடைக்கும் என காத்திருந்தேன், அதற்காக நான் தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டேன். உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு கனவு போன்றது தான், நானும் அந்த கனவுடன் தான் இருந்தேன். ஆனால், கேப்டனான ரோஹித் சர்மாவின் மனநிலையை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு அணி சிறு குறை கூட இல்லாமல், தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கும் போது, எதற்காக ஆடும் லெவனில் மாற்றம் செய்ய வேண்டும். ரோஹித் சர்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தாலும் இதை முடிவை தான் எடுத்திருப்பேன். இறுதி போட்டியில் எதற்காக முயற்சி எடுத்து பார்க்க வேண்டும்..?. எனது வாய்ப்பிற்காக நான் காத்திருந்தது உண்மை தான், ஆனாலும் எனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் எனது அணியை ஊக்கிவிப்பதற்கும் நான் தயாராகவே இருந்தேன். எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற மனநிலையை நான் தயார்படுத்தி கொண்டேன்” என்று தெரிவித்தார்.