உலக நம்பர் 1 & நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இப்படித்தான் பிளான் பண்ணி தூக்கினேன் – ஜடேஜா ஓபன் டாக்!

மார்னஸ் லபுஜானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டுகளை இப்படித்தான் திட்டமிட்டு எடுத்தேன் என்று பேசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.

நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணிக்கு துவக்க வீரர்கள் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் மார்னஸ் லபுஜானே மற்றும் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் ரேங்க் பேட்ஸ்மேன் லபுஜானே 49 ரன்கள் இருந்தபோது, ஜடேஜாவின் பந்தை இறங்கி அடிக்க முயற்சி செய்து தவறவிட, அதை கீப்பர் பரத் ஸ்டம்பிங் செய்தார்.

அடுத்துவந்த பேட்ஸ்மேன் ரென்ஷாவை முதல் பந்திலேயே ஜடேஜா விக்கெட் வீழ்த்தி மேலும் அழுத்தம் கொடுத்தார். உள்ளே நிலைத்து ஆடிவந்த நம்பர் 2 டெஸ்ட் ரேங்க் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் இருந்தபோது, ஜடேஜாவின் மாயாஜால சுழலில் போல்ட் ஆனார்.

ஜடேஜா செய்த தாக்குதலால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. 177 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

இன்னிங்ஸ் முடிந்தபின் பேட்டியளித்த ஜடேஜா, 5 விக்கெட்டுகளை எடுத்தது பற்றியும், உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை திட்டமிட்டு கைப்பற்றியது பற்றியும் பேசினார். ஜடேஜா பேசியதாவது:

“இரண்டு பேட்ஸ்மன்களும் ஒன்று, இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பந்திலும் ரன்கள் அடிப்பது எளிதானது அல்ல. சரியான இடத்தில் பந்துவீச வேண்டும் என்று மட்டுமே நினைத்திருந்தேன். அதிக அளவு டாட் பந்துகளை ஏற்படுத்தினால் இரண்டு பேட்ஸ்மேன்களும் தவறு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் எண்ணினேன். இருவரும் பிஸியான பேட்ஸ்மேன்கள். ரன்கள் எங்காவது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பிட்சில் டர்ன் பெரிதளவில் இல்லை. லைன் மற்றும் லென்த் மட்டுமே என்னிடம் இருக்கும் வழி. அதை மட்டுமே செய்துவந்தேன்.”

“ஒரு பந்து வெளியேவும், இன்னொரு பந்தும் உள்ளேயும் வீசி டர்ன் ஆகிறதா? இல்லையா? என்கிற சந்தேகத்தை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படுத்த முயற்சித்தேன். அப்போது அவர்கள் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தேன்.

லபுஜானே இறங்கி அடித்தபோது, அதிஷ்டவசமாக பந்து டர்ன் ஆனது. ஸ்டம்பிங் ஆனார். ஸ்மித்-க்கு வீசிய பந்து டர்ன் ஆகவில்லை. அதைக்கண்டு ஏமாற்றமடைந்து போல்டு ஆனார். இவை தான் என்னுடைய திட்டமாகவும் இருந்தது.” என கூறினார் ஜடேஜா.

 

Mohamed:

This website uses cookies.