இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் கப்தில், முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது கொலின் முன்றோ 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 6 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
நியூசிலாந்து 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது நியூசிலாந்து வெற்றிக்கு 196 பந்தில் 201 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் ராஸ் டெய்லருடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒன்றிரண்டு ரன்னாக எடுத்து குல்தீப் யாதவ், சாஹல் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
இந்த ஜோடியை பிரித்து விட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் இந்தியா விளையாடியது. ஆனால் இருவரும் இந்தியாவிற்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்கவில்லை. இதனால் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.
45 ஓவர் முடிவில் நியூசிலாந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அடுத்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து டாம் லாதம் சதம் அடித்தார்.
அணியின் வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 49-வது ஓவரின் 5-வது பந்தில் டெய்லர் 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் களம் இறங்கினார். இவர் 49-வது கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.
நியூசிலாந்து அணி 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் – டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் 25-ந்தேதி நடக்கிறது.
விராட் கோலி தனது 200வது ஒருநாள் போட்டியில் நேற்று 31-வது சதம் எடுத்து அணியை நல்ல ஸ்கோருக்கு முன்னேற்றினாலும், மற்றவர்களிடமிருந்து ஒரு அரைசதம் கூட வராத நிலையில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
தோல்விக்கான காரணம் குறித்து ஆட்டம் முடிந்த பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
தொடக்கத்திலேயே நியூஸிலாந்து அணி எங்களை நெருக்கடிக்குள்ளாக்கியதே காரணம். 275 நல்ல ஸ்கோர் என்றே கருதினோம், ஆனால் டாம் லேதம், ராஸ் டெய்லர் பிரமாதம். அங்கொன்றும் இங்கொன்றும் ஓரிரு ரன் அவுட் வாய்ப்புகளைத் தவிர வேறு வாய்ப்புகளை இவர்கள் வழங்கவில்லை.
மேலும் 200 ரன் கூட்டணி அமைத்தால் அந்த அணியே வெற்றிக்குத் தகுதி பெற்ற அணியாகும். கடைசி 13-14 ஓவர்களில் 20-30 ரன்கள் குறைவாக எடுத்தோம். இன்னும் ஓரிருவர் நன்றாக பேட்டிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், நல்ல பேட்டிங்கை எதிர்நோக்குகிறோம். இன்னும் ஓரிருவர் ரன்கள் எடுத்திருந்தால் 30-40 ரன்கள் கூடுதலாக வந்திருக்கும்.
நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் நம் ஸ்பின்னர்களை சரியாகக் கையாண்டனர். டாம் லேதம், ராஸ் டெய்லரைப் பாராட்டுகிறேன். அதே போல் டிரெண்ட் போல்ட் பந்து வீச்சில் சிறப்பாக வீசினார்.
முதல் நிலை ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு பிட்சில் பந்துகள் திரும்பும் நிலையே காணப்பட்டது. நியூஸிலாந்தின் பின் கள வீரர்கள் இறங்கியிருந்தால் கேதார் ஜாதவ்வை பயன்படுத்தியிருப்பேன். ஹர்திக் நன்றாக வீசியதால் கேதாரை கொண்டு வர வேண்டிய தேவையை உணரவில்லை.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.