எங்கே இளம் வீரர்கள்?
* கடந்த வருடம் ரஷியாவில் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையை இளம் வீரர்களைக் கொண்டு ஜெர்மனி அணி வென்றது. இதனால் அதே ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியையும் ஜெர்மனி வெல்லும் என்றே பலரும் நம்பினார்கள். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறியது யாருமே எதிர்பாராதது.
கான்ஃபெடரேஷன் கோப்பையில் மூத்த வீரர்களின் உதவியின்றி இளம் வீரர்களைக் கொண்டு வென்றது ஜெர்மனி. ஆனால் உலகக் கோப்பையில் டிமோ வெர்னரைத் தவிர இதர இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மூத்த வீரர்களுக்குக் காயம் ஏற்படும்போது மட்டுமே லியோன், நிக்லாஸ், ஜூலியன் செபாஸ்டியன் ருடி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. பிரீமியர் லீக் போட்டியில் சிறந்த இளம் வீரராகப் பட்டம் வென்ற லெராய் சேனை அணியில் சேர்க்காததும் பெரிய குற்றமாகத் தற்போது பார்க்கப்படுகிறது.
முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோவுடன் 0-1 எனத் தோற்றது ஜெர்மனி. இதையடுத்து ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் மெசுட் ஓஸில், கெடிரா ஆகிய இருவரும் நீக்கப்பட்டார்கள். அதில் 2-1 என வென்றது ஜெர்மனி. எனினும் நேற்றைய ஆட்டத்தில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருவரும் சொதப்பி மீண்டும் ஏமாற்றினார்கள். 2014 உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த தாமல் முல்லர் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. டோனி க்ரூஸும் அப்படியே. முக்கிய வீரர்களின் மோசமான பங்களிப்பால் இந்தத் தோல்விகளைச் சந்தித்துள்ளது ஜெர்மனி அணி.